சென்னை, ஜூன் 8: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி 125 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ராயபுரம், ரெயில்வே அச்சகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே டிஜிட்டல் மயமாகிவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் 1891-ம் ஆண்டு ராயபுரத்தில் ரெயில்வே பிரிண்டிஷ் பிரஸ் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் கார்டுபோர்டு டிக்கெட்டுகள் இங்கு அச்சிடப்பட்டன.

அதேபோல் ரெயில்வேக்கு தேவையான வரைபடம் மற்றும் எழுது பொருள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களும் இங்கு தயாரிக்கப்பட்டன.  1926-ல் செவ்வக வடிவு அட்டையில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டது. கிட்டதட்ட 60 ஆண்டு காலம் இது நடைமுறையில் இருந்தது. 2000-ம் ஆண்டில் இருந்தே ரெயில்வே தனி மயமாக தொடங்கியது. பின்னர் கணினி வாயில்£க டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டதால் ராயபுரம் பிரிண்டிங் பிரசின் பணி குறைந்தது.

தற்போது முற்றிலும் டிஜிட்டல் மயமாகி பேப்பரில்லா ரெயில்வே நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து 2017-ம் ஆண்டிலேயே ராயபுரம் பிரிண்டிங் பிரசை மூடுவதற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழிற்சங்கங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது ராயப்பேட்டை பிரிண்டிங் பிரஸ் மற்றும் மும்பை, ஹவுரா, செகந்திராபாத் மற்றும் டெல்லி ஆகி ய 5 இடங்களில் உள்ள ரெயில்வே பிரிண்டிங் பிரஸ்கள் 2020 மார்ச் 31 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சகங்களில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்ட பிற சாதனங்கள் சந்தை விலைக்கு விற்கப்படும் என்றும், தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டலங்களில் பாதுகாப்பு பிரிவில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் ரெயில்வே அறிவித்துள்ளது.

இருப்பினும் தொழிற்சங்கங்கள் தரப்பில் இது ரெயில்வேயை மறைமுகமாக தனியார் மயமாக்கும் செயல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகளுக்கு டிஜிட்டல் நடைமுறையை கையாள தெரியாத போது எப்படி பேப்பர் டிக்கெட்டுகளை ஒழிக்க முடியும் என கேள்விகள் எழுப்பி உள்ளனர்.