சென்னை, ஜூன் 8: அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் பிகாம், பிஎஸ்சி உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2019-20 கல்வியாண்டில் அதிகரித்துள்ளது.
அதிக வரவேற்பு காரணமாக, விரும்பும் படிப்புகளில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் கல்வியாண்டில் கூடுதலாக 4-ஆவது வகுப்பை (செக்ஷன்) கல்லூரிகள் தொடங்கிக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதுவரை ஒவ்வொரு படிப்பிலும் அதிகபட்சம் மூன்று வகுப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. இதுபோல, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டிலும் 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.