கொழும்பு, ஜூன் 9: ஒருநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ம் தேதி பதவி ஏற்றது.

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இலங்கைக்கு இன்று அவர் சென்றார். தனது மாலத்தீவு பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இதன்படி, மோடி நேற்று மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருதை அந்த நாட்டின் அதிபர் வழங்கினார். இதனை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தினார். இருநாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிரதமர் மோடி கொழும்பு போய் சேர்ந்தார். அங்கு கட்டநாயகா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவரை முறைப்படி வரவேற்றார். பிரதமர் இன்றே தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.