லண்டன், ஜூன் 9: நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஓராண்டாக ஒருநாள் ஆட்டங்களில் சரியாக சோபிக்காமல் இருந்து வந்த ஆஸ்திரேலியா அணி தற்போது ஸ்மித், வார்னர் வருகையால் எழுச்சி பெற்றுள்ளது. பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கவாஜா, ஸ்டாய்னிஸ், ஆகியோரும் கூடுதல் பலம் சேர்த்து வருகின்றனர்.

அந்த அணியின் பவுலிங் எப்போதுமே வலிமையானது. ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஸ்டாய்னிஸ் ஆகியோரின் பந்து வீச்சு எந்த ஸ்கோரையும் எதிர்கொள்ளக் கூடியதாகும்.  முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, 2-வது ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசை போராடி வென்றது.

தொடர்ந்து 10 ஒரு நாள் ஆட்டங்களில் வென்ற சிறப்பை இதன் மூலம் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்த தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வலிமையுடன் இந்தியா களமிறங்குகிறது. தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி, முதல் ஆட்டத்தில் வலிமையான தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பி உள்ளது இந்திய வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, சாகல் ஆகியோர் எதிரணியை நிலைகுலையச் செய்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். மிடில் ஆர்டரில் கேஎல். ராகுல் பொறுப்பாக ஆடினார். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவன், விராத் கோலி ஆகியோர் சோபிக்கவில்லை.

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலை கோலிக்கு உள்ளது.

 

சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம்

ஓவல் மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது கடினமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றியை, தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக டாஸ் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக மைதானம் ஒத்துழைக்கும் என்பது இந்திய அணிக்கு கூடுதல் வாய்ப்பாகும்.
நேருக்கு நேர்
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒருநாள் ஆட்டங்களில் நெடிய வரலாறு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 136 ஆட்டங்களில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 77 போட்டிகளிலும், இந்தியா 49 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.