புதுடெல்லி ஜூன் 9:
காங்கிரசை வலுப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான திட்டத்தை மூத்த தலைவர்கள் வகுத்து வருகிறார்கள்.

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய ராகுல் காந்தி மூத்த தலைவர்களை இன்னும் சந்திக்க மறுக்கிறார். மே 25 ந்தில் நடைபெற்ற காரியகமிட்டி கூட்டத்தில் அவரது ராஜினாமவை ஏற்க மறுக்கப்பட்டது. இந்த விசயத்தில் ராகுல் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் அல்லது பொருத்தமானவரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில் மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத் தனது மகன் நிகுல்நாத்துடன் சென்று ராகுலை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் அவரை சந்திக்க ராகுல் மறுத்துவிட்டார்.

இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியை தனது மகனுடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு திரும்பினார். தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் ராகுல் இன்று டெல்லி திரும்புகிறார். வயநாட்டில் அவர் பேசிய போது பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளையும், வெறுப்பூட்டும் பேச்சுகளால் வெற்றி பெற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி “பிரஜா சங்கல்ப யாத்திரா” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 14 மாத காலம் 3000 கி.மீ. தூரத்திற்கு மேல் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார் இதனால் அவருக்கு ஏற்பட்ட செல்வாக்கு காரணமாக ஆட்சியை பிடித்துள்ளார்.

2017-ல் குஜராத்தில் ராகுல் மேற்கொண்ட பாதயாத்திரையால் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு காங்கிரஸ் கடும் நேருக்கடியை கொடுத்தது.  இப்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜெகன் மோகன் ரெட்டியை பின்பற்றி நாடு தழுவிய அளவில் பாரத் யாத்திரா மேற்கொள்ள ராகுல் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நடந்தும், காரில் சென்றும் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்து இந்த யாத்திரையை மேற்கொள்ள அவர் திட்டமிட்டு இருப்பதாக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.