விழுப்புரம்,ஜூன்.9: இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் தினசரி 31 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் பெருமிதம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை ஆய்வு செய்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது- தமிழக அரசால் கடந்த 2011-ம் ஆண்டு வழங்கப்பட்ட விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் அருமலை முதல் கிராமமாக தேர்வு செய்யப்பட்டு 50 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தில் கறவைப் பசுக்கள் தலா.ரூ.38,850 ஒதுக்கீடு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டில், 23 கிராமங்களில் பயனாளிகளுக்கு ரூ.4.05 கோடியிலும், 2012-13-ம் ஆண்டில் 23 கிராமங்களில் 1,150 பயனாளிகளுக்கு 4.06 கோடி மதிப்பிலும், 2013-14-ம் ஆண்டில் 23 கிராமங்களில் 1,168 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பிலும் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, 2014-15-ம் ஆண்டில் 23 கிராமங்களில், 1,150 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலும், 2015-16-ம் ஆண்டில் 25 கிராமங்களில், 1,250 பயனாளிகளுக்கு ரூ.4.39 கோடி மதிப்பிலும், 2016-17-ம் ஆண்டு 12 கிராமங்களில் 600 பயனாளிகளுக்கு ரூ.2.42 கோடி மதிப்பிலும், 2017-18-ம் ஆண்டு 30 கிராமங்களில் 1,500 பயனாளிகளுக்கு ரூ.6.07 கோடி மதிப்பிலும், கடந்த (2018-19) 9 கிராமங்களில் 450 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மதிப்பிலும் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன.

இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 168 கிராமங்களில், ரூ.3.11 கோடி மதிப்பில், 8,418 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். வழங்கப்பட்ட கறவை பசுக்கள் மூலம் 16,985 கன்றுகள் பிறந்துள்ளன. இந்த கறவைப் பசுக்கள் மூலம் 31,908 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.