துபாய் விபத்து : 11 இந்தியர் உடல் கொண்டுவரப்பட்டது

இந்தியா உலகம்

துபாய், ஜூன் 9: 17 உயிர்களை பறித்த துபாய் பஸ் விபத்தில் இறந்த 11 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் இன்று மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒருவரின் உடல் மட்டும் வளைகுடா நாட்டில் தகனம் செய்யப்பட்டது.

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து கடந்த ஆறாம் தேதி மாலை துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தில் ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதின் அரக்கவெட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாக்குர் உள்பட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த இந்தியர்களின் உடல்களை பதப்படுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் செலவை அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்றது. இதைதொடர்ந்து இன்று அதிகாலை சுமார் 3.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் 11 உடல்கள் ஏற்றி அனுப்பப்பட்டது. இங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.