புதுடெல்லி, ஜூன் 9: மக்களவை தேர்தல் நடந்ததால் பிஜேபி அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பிஜேபி தயாராகி வருகிறது.

எனவே இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்கிறார். அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பா.ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவர் ஆக்கலாம் என கூறப்படுகிறது. ஜேபி நட்டாவை தலைவராக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது நட்டாவை செயல் தலைவர் ஆக்கிவிட்டு கட்சியின் தேசிய தலைவராக அமித்சாவே தொடர்ந்து நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து 13 மற்றும் 14 ந் தேதிகளி¢ நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.