சிவகார்த்திகேயனை திருப்திப் படுத்திய இயக்குனர்

சினிமா

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.இந்த படத்தில் ரியோ நாயகனாகவும், ஷிரின் காஞ்ச்வாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். காமெடி காதாப்பாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் நடித்துள்ளார்.

படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.

படம் குறித்து கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது.

இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். \சிவகார்த்திகேயன் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன்.

ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது என்றார்.