கோழிக்கோடு, ஜூன் 9: கேரள மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு, வயநாடு தொகுதியில் தம்மை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாம் பிறந்தபொழுது மருத்துவமனையில் உடனிருந்த செவிலியரை இன்று சந்தித்து உரையாடினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாடுக்கு வந்துள்ளார். முதல் நாளில் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இரண்டாவது நாளான நேற்று காலை வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்தார்.

அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். ராகுல் காந்தியை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தியை விவசாயிகள், பழங்குடியினர் என பல்வேறு பிரிவினர் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். ஏராளமான மக்கள் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கையை கூறினார்கள். சிலர் மனுக்களும் கொடுத்தனர்.

நேற்று மொத்தம் ஆறு இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் நின்று தங்கள் புதிய எம்.பி.யை வரவேற்றனர்.
இன்று மூன்றாவது நாளாக கேரளாவின் கோழிக்கோட்டில் தனது கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார்.

திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்தபடியே சென்ற அவருக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு முன் கோழிக்கோட்டில், ராஜம்மா என்ற ஓய்வு பெற்ற பெண் செவிலியரை நேரில் சந்தித்து பேசினார்.

ராகுல் காந்தி பிறந்தபொழுது செவிலியராக பணியாற்றிய அவரிடம், பழைய நினைவுகளை பற்றி பேசினார். ராகுல் காந்தி தனது 3வது நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.