புதுடெல்லி, ஜூன் 9: நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் பயணிகளுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் திட்டத்தை ரெயில்வே விரைவில் அமல்படுத்த உள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரெயிலில் மசாஜ் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். குறிப்பாக, மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லம் கோட்டத்திலிருந்து இத்தகைய கோரிக்கைகள் அதிக அளவில் வரப்பெற்றன.

இந்தூரிலிருந்து புறப்படும் 39 ரெயில்களில் இந்த வசதி கிடைக்கும். குறிப்பாக, டேராடூன்-இந்தூர் எக்ஸ்பிரஸ், புதுதில்லி- இந்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தூர்-அமிருதசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போருக்கு இந்த மசாஜ் வசதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் ஊடக பிரிவு இயக்குநர் ராஜேஷ் பஜ்பாய் மேலும் கூறியதாவது:
ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் வசதியை வழங்க முதல் முறையாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.

இதற்காக, தலை மசாஜ் மற்றும் கால் மசாஜ் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். மசாஜ் சேவையை அளிப்பற்காக ஒவ்வொரு ரயிலிலும் 3-5 பேர் இருப்பர். ரயில்வே சார்பில் அவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்படும்.

இன்னும் 15-20 நாள்களில் ரயில் பயணத்தில் மசாஜ் சேவை நடைமுறைக்கு வரும் என்றார்.