டாண்டன் / கார்டிப், ஜூன் 9: டாண்டன் நகரில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியிடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி எளிதாக தோல்வியடைந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் நேற்று இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆப்கானை எதிர் கொண்டது.

டாஸ் வென்ற நியூசி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கன் வீரர்கள் ஹஸ்ரத்துல்லா 34, நூர் அலி ஸட்ரன் 31 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்ததால் 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூஸி தரப்பில் ஜேம்ஸ் நீஷம் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், பெர்குஸன் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசி அணியின் ராஸ் டெய்லர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன் குவித்தனர். டெய்லர் 48 ரன்களும் வில்லியம்சன் 79 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 32.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. நியூசி அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்து இந்த வெற்றியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.