சென்னை, ஜூன் 10: கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியாகத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலையால் கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடப்பட்டிருந்தது. கேரள மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த அழுத்தநிலை காரணமாக தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும் இது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குள் தீவிரமடைந்து வட மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.

இதன் காரணமாக, கன மழை அல்லது மிக கனமழை பெய்யும். வடக்கு மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த மூன்று நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்.

இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.