சென்னை, ஜூன் 10: பிரபல நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பிரபல நடிகர் கிரேசி மோகன் 1952-ம் ஆண்டு பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். பொறியாளராக படித்து தேர்வு பெற்றார். பள்ளி, கல்லுரிகளில் படிக்கும் போதே நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.

1979-ம் ஆண்டு கிரேசி கிரியேஷன் என்ற அமைப்பை நாடக அமைப்பை உருவாக்கி நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றினார். அவற்றுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் ‘கிரேசி மோகன்’ என்று அழைக்கப்பட்டார்.

‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ அவருடைய முதல் நாடகமாகும். அதன் ‘மேரிஜ் மேட் இன் சலூன்’, ‘மாது பிளஸ் 2’ ‘மாது, சீனு’ உள்பட பல நாடகங்களை அவர் இயக்கினார். கடைசியாக ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘கிரேசி பிரிமியர் லீக்’ ஆகிய நாடகங்களை இயக்கினார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்து இயக்கினார்.

முதல் முறையாக பாலசந்தர் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை படத்துக்கு கதை, வசனம் எழுதினார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த சதிலீலாவதி, காதலா, காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பிரபு நடித்த சின்ன வாத்தியார் போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியதுடன் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நாடக ஆசிரியர் மட்டுமின்றி தமிழிலும் புலமை பெற்றவர். 40 ஆயிரம் வெண்பா பாடல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். தஞ்சாவூர் ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஏராளமான ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறார். அவர் கலைமாமணி விருது பெற்றவர்.

அவருடைய சகோதரர் மாது அவருடைய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரம். கிரேசி மோகனுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.