புதுடெல்லி, ஜூன் 10: மருத்துவர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் 75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: போதிய வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் திட்டங்களில் ஒன்றாகும். அதன்படி, முதல் கட்டமாக, 58 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்டமாக, 24 மாவட்ட மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள மருத்துவமனைகளில், 39 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மற்றவை கட்டுமானப் பணியில் உள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்டமாக, 75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை, மத்திய நிதி செலவினக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய அமைச்சரவைக்கு இந்தப் பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரிகளாகத் தரம் உயர்த்துவதற்கு ரூ.325 கோடி செலவாகும். மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதால், கூடுதலாக 10,000 எம்.பி.பி.எஸ். இடங்களும், 8,000 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களும் கிடைக்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், உண்மையில், 1953 பேருக்கு ஒரு மருத்துவரே உள்ளனர். எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது.

ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ படிப்பை முடிப்பவர்களின் சராசரி குறைவாகவே உள்ளது. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருகி வருவதால், அங்கு ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில்வது சிரமமாகிறது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், மக்களவைத் தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேறும்.