பதான்கோட், ஜூன் 10: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு 8 வயது சிறுமி கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதுக்கு குறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவனுக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி கடத்தி செல்லப்பட்டார். மறைவான ஒரு இடத்தில் அந்த சிறுமியை நான்கைந்து நாட்கள் வைத்திருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவளை பலமுறை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் கழுத்தை நெறித்து சிறுமியை கொன்ற கும்பல் அவளது பிணத்தை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கி வீசிவிட்டு சென்றது. ஜனவரி 17-ந் தேதி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சஞ்ஜி ராம் என்ற அரசு ஊழியர் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு பதான்கோட் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

மூடப்பட்ட அறையில் நடைபெற்ற விசாரணை கடந்த 3-ந் தேதி முடிவடைந்தது, இந்நிலையில் மாவட்ட அமர்வு நீதிபதி தேஜ்வீந்தர் சிங் இன்று தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு அளிக்கப்படுவதையொட்டி பதான்கோட்நீதிமன்றத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளில் ஒருவரான விஷால் என்பவன் குற்றம் நடைபெற்ற போது 18 வயதுக்கு குறைவாக இருந்ததால் அவன் குறித்த தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என தெரிகிறது. குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.