பெங்களூரு, ஜூன் 10: பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று பெங்களுரில் காலமானார். அவருக்கு வயது 81. 1938-ம் ஆண்டு மும்பையில் பிறந்த கர்னாட் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். 1998-ம் ஆண்டு எழுத்தாளர்களுக்கான உயரிய விருதான ஞானபீட விருதையும் இவர் பெற்றார்.

கிரிஷ் கர்னாட் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.திரைப்படங்களில் நடித்த போதிலும் ஐம்பது ஆண்டுகளாக நாடகங்களையும் இயக்கி வந்தார்.  அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. நிஷாந்த், மந்தன், சுவாமி, புக்கார், இக்பால், தார் உள்ளிட்ட இந்தி படங்களில் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்துள்ளார்.

சல்மான் கானின் ஏக்தா டைகர், டைகர் ஜிந்தாஹை ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் அவர் நடித்தார்.தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த நான் அடிமை இல்லை போன்ற படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 1974 முதல் 1978 வரை திரைப்பட தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்இயக்குனராகவும், சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் கிரிஷ் கர்னாட் பணியாற்றியுள்ளார்.

வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் இன்று காலையில் காலமானார்.கிரிஷ் கர்னாட் மறைவுக்கு நடிகர் கமல், பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.