சென்னை, ஜூன் 10: தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பின்பற்றப்படும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறினார்.

சென்னைக்கு வருகை தந்த தினேஷ் சர்மா தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செயலர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார். அப்போது அந்த நூலகத்தில் உள்ள நவீன வசதிகள், குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டுகள், அறிவுத்திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகள், பள்ளிக் கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி சேனல் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் தமிழக அமைச்சர் செங்கோட்டையன், உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா ஆகியோர் இரு மாநில பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தினேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை “ஸ்கேன்’ செய்து அறிவதற்காக க்யூ.ஆர் குறியீடு முறை தமிழகப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த முறை உள்பட தமிழக பாடத்திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் உத்தரப் பிரதேச பள்ளிகளிலும் பின்பற்றப்படும் என்றார்.