லண்டன், ஜூன் 11: கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9-ம் தேதி நடந்த உலகக்கோப்பை போட்டியில் அபார சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பவுலர் நாதன் கோல்டர் நைல் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. உடனடியாக, பிசியோதெரபிஸ்ட் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இருப்பினும், வலியையும் பொருட்படுத்தாமல் தனது ஆட்டத்தை தொடர்ந்த தவான் சதம் விளாசி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, காயம்பட்ட விரல் கடுமையாக வீங்கியதால், அவரால் ஃபீல்டிங் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், காயத்தின் தீவிரத்தை அறியும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கைவிரலில் இன்று ஸ்கேன் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவின் அடிப்படையில், தவான் 3 வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக, உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.