பா.காசி விஸ்வநாதன்-

‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது பழமொழி. சுற்றியிருந்தவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகர் கிரேசி மோகன். இன்று அனைவரையும் அழவைத்துவிட்டு கண்ணாடிப் பேழைக்குள் கண் மூடிப்படுத்து விட்டார்.

நகைச்சுவை உணர்வு கொண்டவர்களை எமனும் நெருங்கப் பயப்படுவான் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவரை எப்படி இவ்வளவு சீக்கிரம் நெருங்கினான் எமன்? இவரது நகைச்சுவை நாடகங்களையும், படங்களையும் பார்த்த எமதர்மன், அவற்றை கிட்டேயிருந்து ரசிப்பதற்காகத்தான் அவரை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
நேற்று காலையில் எப்போதும் போல் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மோகனுக்கு திடீரென வியர்த்துக் கொட்டியிருக்கிறது. நெஞ்சு வலிப்பதாக கூறியிருக்கிறார். உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கொஞ்ச நேரத்திலேயே எல்லாம் முடிந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் அவதிப்படாமல் இந்த மாதிரி இறப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்த கிரேசி மோகன், சிறிது காலம் டிவிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். ரத்தத்தில் ஊறிய நகைச்சுவை உணர்வும், நாடகத்தின்பால் அவரை திருப்பியது. ‘கிரேசி பாய்ஸ் இன் தி கேம்ஸ்’ என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கத்தால் எஸ்வி. சேகருக்கு கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை முதன்முதலில் எழுதினார். அந்த ‘கிரேசி’ அவருடன் கடைசி வரைக்கும் ஒட்டிக் கொண்டது. மதில் மேல் மாது, மாது பிளஸ் 2, மீசையானாலும் மனைவி, ஜுராசிக் பேபி, சாக்லேட் கிருஷ்ணா போன்றவை அவரது புகழ்பெற்ற நாடகங்கள்.

நாடகங்களில் புகழ்க்கொடி நாட்டியவர், சினிமாவுக்கும் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம், தெனாலி, காதலா காதலா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தேடினேன் வந்தது, சின்ன மாப்பிள்ளை, சின்ன வாத்தியார், ஆஹா, நான் ஈ, அவ்வை சண்முகி, பம்மல் கே சம்மந்தம் என நாற்பது படங்களுக்கும் மேல் கதை, வசனம் எழுதி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தார்.

தனக்கு கிடைத்த அத்தனை புகழையும், தலையில் ஏற்றிக்கொள்ளாமல், பந்தா சிறிதுமின்றி சர்வசாதாரணமாக ஒரு டீசர்ட்டை போட்டுக்கொண்டு வலம் வந்தவர் கிரேசி மோகன்.
அடுத்தவர்களை சிரிக்க வைக்காமல் கிரேசி மோகனால் பேசவே முடியாது என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகிறார்கள். ரசிகர்களே வராமல் காற்றாடிக் கொண்டிருந்த நாடக மேடைகளை நிரம்ப வைத்தவர் கிரேசி மோகன். நாடகங்களில் அவர் படைத்த மாது, சீனு, ஜானகி கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாக இன்றைக்கும் திகழ்கின்றன.

பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த கிரேசி மோகன், ஓவியம் வரைவதிலும் வல்லவர். மிக அற்புதமான ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறாராம். ஆனால் அவற்றை காட்சிப்படுத்த அவர் விரும்பியதில்லை. வெண்பாக்களை இயற்றுவதில் வல்லவராகவும் திகழ்ந்திருக்கிறார். சுமார் 40 ஆயிரம் வெண்பாக்களை அவர் இயற்றியிருக்கிறார்.

சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை வசனம் என்றால் இரட்டை அர்த்தமும், விரசமும் கலந்தவை என்பது தவிர்க்க முடியாதவை. ஆனால் கிரேசி மோகனின் வசனங்களில் இவற்றைக் கொஞ்சம் கூட காண முடியாது. நகைச்சுவை என்ற பெயரில் பிறரை புண்படுத்தாத நல்ல மனதுக்கு அவர் சொந்தக்காரர். அவர் மறைந்தாலும், அவரது படைப்புகள் சாகாவரம் பெற்று திகழும் என்பதில் ஐயமில்லை.

சமூக வலைதளத்தில் உலா வரும் கிரேசி மோகன் ஜோக்ஸ்
* இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?
மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
* என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா…!!
அய்யோ…!! அப்பறம்?
“சாத்திட்டா”
* கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?
முழுகாம இருக்கா.!!!???….
* டாக்டர் : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?
போயும் போயும், இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்!
* எம்ப்ளாய்மென்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?
அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இன்டர்வியூ வந்திருக்கு!
* மாமனாரிடம் வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
அதனால?
வரதட்சணையே வாங்காம மச்சினிய இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!
* தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?
நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்”
* ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?
ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல ஏழையாயிடுவாரு!
தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?
சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?”
* உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே..? அவங்க மேல அவ்வளவு பிரியமா…?
அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!