சவுத்தாம்டன், ஜூன் 11: வெ. இண்டீஸ்-தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதற்கு, தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ பிளெசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், ஆட்டத்தை தொடர்வதற்கான சாதக சூழல் இல்லாததையடுத்து, போட்டி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து, தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிளெசிஸ் கூறுகையில், மழை, போட்டியை பாதித்தது மோசமானது. இரண்டு அணிகளும் ஒரு முடிவை எதிர்பார்த்தோம். ஆனால் எங்களால் வானிலையை கட்டுப்படுத்த முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம்.

பெரும்பாலான போட்டிகளில், 2-வது பேட்டிங்கின் போதுதான் மழை வரும். அதனால் போட்டி 30 அல்லது 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு முடிவு பெறும். ஆனால், இந்த போட்டியில் அப்படிக்கூட எதுவும் நடக்கவில்லை. லுங்கி நிகிடி அடுத்த போட்டியில் தயார் ஆகிவிடுவார். அடுத்த போட்டி எங்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால் வலிமையான பவுலிங்குடன் களமிறங்குவோம், என்றார்.

தெ.ஆப்பிரிக்காவை கலாய்க்கும் நெட்டிசன்கள்:
இதுவரை வெற்றிக்கணக்கை தொடங்காமல், பூஜ்யத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவுக்கு, இந்த போட்டியில், மழையின் புண்ணியத்தால் ஒரு புள்ளி பெற்றுள்ளது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.