சென்னை, ஜூன் 11:அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில்,   அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், கட்சி அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஒரு எம்.பி.யும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக அதிகரித்தது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் மேலும் 2 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வகையில் மக்களின் நம்பிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெற்றுள்ளது.

இந்நிலையில் ஒற்றை தலைமை அதிமுக வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் கட்சியை வழி நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தினர். இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரனும் ஆதரவு தெரிவித்த நிலையில், அதிமுகவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களின் கோரிக்கை தேவையற்ற என்றும், ஓபிஎஸ்., இபிஎஸ் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒற்றை தலைமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கட்சியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அதிமுக உட்கட்சி விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக யாரும் பத்திரிகைகளுக்கே, அறிக்கை, கருத்து தெரிவிக்க அதிமுக தலைமை தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வரும் 12-ம் தேதி நாளை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை காலை 10 அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தங்களுக்குரிய அழைப்பிதழோடு வருபவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் அ.தி.மு.க.வின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை நடைபெறவுள்ள கூட்டத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும் கட்சியை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை வழங்குவார்கள் என தெரிகிறது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக கட்சி தலைமையை சந்தித்து தங்களது கோரிக்கை தெரிவிக்கும்படியும், தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் கட்சியினருக்கு அதிமுக தலைமை உத்தரவிடும் எனவும் தெரிகிறது.