புதுடெல்லி, ஜூன் 11: தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை வாபஸ் பெற ராகுல் தொடர்ந்து மறுத்து வருவதால் அகில இந்திய காங்கிரசுக்கு தற்காலிக தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி இந்த பொறுப்பை ஏற்கலாம் என தெரிகிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மே 25-ல் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ராகுல் தெரிவித்தார்.

இதை செயற்குழு நிராகரித்த போதிலும் இதை தனது முடிவை வாபஸ் பெற அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனால் கட்சியில் முடிவுகள் எடுக்க முடியாத தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
தோல்வியடைந்த மாநிலங்களில் உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் கொலிஜியம் என்ற உயர்மட்ட அமைப்பை உண்டாக்கி இந்த அமைப்பிற்கு ஒருவரை தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அவரே கட்சியின்
தற்காலிக தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது.

இது குறித்து கேரளாவை சேர்ந்த் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோணி இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அந்தோணியே தற்காலிக தலைவராகவும் செயல்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்ந்தெடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காங்கிரசுக்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

வரும் 17-ம் தேதி மக்களவை கூட்டம் தொடங்க இருப்பதால் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக தேர்தல் சமயத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா உ.பியில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அமேதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அத்தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசினார். சோனியாகாந்தி வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த இரு வாரமாக மூத்த தலைவர்களை சந்திக்க மறுத்து வந்த ராகுல்காந்தி நேற்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங்சித்துவை சந்தித்து பேசினார். பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அண்மையில் சித்து வகித்த சுற்றுலா மற்றும் கலாச்சார துறையை பறித்து விட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை ஒருக்கினார். இந்த இலாகாவை எற்க சித்து மறுத்து வருகிறார். பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ளஇந்த மோதல் குறித்து சித்துவிடம் ராகுல் ஆலோசித்ததாக தெரிகிறது.