சென்னை, ஜூன் 11: முன்னாள் அமைச்சர் ஆர்.டி. இன்பத்தமிழன், அமமுகவில் இருந்து விலகி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாமரைக்கனி. இவர் பலமுறை அந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். ஒருமுறை இவருக்கு சீட்டுக் கிடைக்காத போதும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழனும் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 2001-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து இன்பத்தமிழன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவரை ஜெயலலிதா அமைச்சராக்கினார்.

அதற்கு பின்னர் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தாமரைக்கனி கடைசிக் காலத்தில் திமுகவில் சேர்ந்த போதிலும் இன்பத்தமிழன் அதிமுகவிலேயே தொடர்ந்து இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டபோது இன்பத்தமிழன் டிடிவி தினகரன் பக்கம் சென்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தினகரன் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து பலர் விலகி அதிமுகவில் சேர்ந்தனர்.

அந்த வகையில் இன்பத்தமிழனும் அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தையும் இன்பத்தமிழன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2001-2006-ம் ஆண்டு காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஆர்.டி.இன்பத்தமிழன். இவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் ஆவார்.