தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

இந்தியா

புதுடெல்லி, ஜூன் 11: 17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பிஜேபி எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அபரிமிதமான பெரும்பான்மையுடன், பிஜேபி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது.

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் இரண்டு நாட்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு ஏதுவாக மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பிஜேபி எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதனைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும். புதிய சபாநாயகரின் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும். 20-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26-ந் தேதி இந்த கூட்டத்தொடர் முடிகிறது. இதற்குள் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார்.