பிரிஸ்டல், ஜூன் 11: மழைக்காரணமாக இலங்கை – வங்கதேச அணிகள் மோதும் உலகக்கோப்பை ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் பிரிஸ்டலில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. இதில், இலங்கை-வங்கதேச அணிகள் மோதவிருந்தன. இந்த நிலையில், தொடர் மழைக்காரணமாக டாஸ் கூட போடமுடியாத சூழல் நிலவிவருவதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்றைய ஆட்டமும் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காரணமாக, விண்டீஸ்-தென்னாப்பிரிக்கா இடையேயான நேற்றைய போட்டியும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அடுத்துவரும் 3 நாட்களுக்கு இங்கிலாந்தில் மழை நீடிக்கும் என்று உள்ளூர் வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே முன்னறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.