சென்னை, ஜூன் 11: தன்னுடைய நகைச்சுவை வசனங்களால் தமிழ்மக்களை கட்டிப்போட்ட நகைச்சுவை மன்னன் கிரேசி மோகனின் உடல் இன்று பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தமிழ் திரைஉலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

பிரபல நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா, எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கிரேசி மோகன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். மந்தவெளியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரை உலகத்தினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.மக்கள் நீதி மய்ய தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர்கள் நாசர், சிவக்குமார், நகைச்சுவை நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, விவேக், கவுண்டமணி, வையாபுரி, மனோபாலா, தாமு, நகைச்சுவை நடிகை கோவை சரளா, கவிஞர் வைரமுத்து, நடிகைகள் கவுதமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மறைந்த கிரேசி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 10 மணிக்கு மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பெசன் ட் நகர் பகுதியிலுள்ள மின்மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதில், கமல் ஹாசனும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், நாடகக் கலைஞர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.