சென்னை, ஜூன் 11:  சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் காதலி உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள காதலனுக்கு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சவுகார்ப்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமேர் சிங் (வயது 23). இவர், அதேபகுதியில் கோவிந்தப்பன் தெருவில் உள்ள மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை பார்த்துவந்துள்ளார். இவரும் சென்னையில் பி.காம். படித்துவரும் காஜல் என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இருவரும் நேற்று மதியம் சேப்பாக்கம் மியான் சாஹிப் தெருவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படாததையடுத்து, சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால், உள்தாழை உடைத்து சென்று பார்த்தபோது, இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அசைவற்று கிடந்துள்ளனர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து, திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருவரும் விஷம் குடித்துள்ளனர் என்பதும், ஆனால், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வாலிபருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இளம் காதல்ஜோடி விடுதிக்கு வந்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.