சென்னை, ஜூன் 12: அண்ணாசாலையில் உள்ள நந்தனம், சைதை, ஆயிரம்விளக்கு, எல்ஐசி, மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களில் விரைவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன.தற்போது பயணிகள் இந்த ரெயில் நிலையங்களுக்கு படிக்கட்டுகளில் நடந்து செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க மெட்ரோ நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மெட்ரோ நிர்வாக அதிகரிகள் கூறியுள்ளனர்.

இப்போது அண்ணாசாலையில் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் மட்டுமே நகரும் படிக்கட்டுகள் உள்ளன. டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஊழியர்களுக்கு இது ஏதுவாக உள்ளது. இதேபோல் பிற ரெயில் நிலையங்களிலும் குறிப்பாக நந்தன்ம், மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில், வெங்கடநாராயணா சாலையில் இருப்பதால் சுறுசுறுப்பான இந்த பகுதியில் இருந்து வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு இங்கு அமைக்கப்பட்டு வரும் எஸ்குலேட்டர் பணி விரைவில் நிறைவடைந்து விடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் சைதாப்பேட்டை பஸ்நிலையத்தையொட்டி உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு நுழைவு வாயிலிலும் மற்றும் ஆயிரம் விளக்கு, எல்ஐசி ஆகிய இரு ரெயில் நிலையங்களில் இரு நுழைவு வாயில்களில் எஸ்குலேட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இவை விரைவில் நிறைவடைந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர அண்ணாசாலையில் அண்ணா சிலை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளன.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும், சுரங்கப்பாதைகளை புதுப்பிக்காமல் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பணிகள் தொடங்கியதும் பாத சாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சுரங்கப்பாதைகளின் ஒரு பகுதி மட்டுமே மூடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.