சென்னை, ஜூன் 12:  கட்சிக்கு விரோதமாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

தலைமை கழகம் அறிவிக்கும் வரை ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென கழக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கழக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும், கழகத்தின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் கழக நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துக்களை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்.நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், கழக செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கழகத்தின் சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அஇஅதிமுக-வின் பிரதிநிதிகளைப் போல சித்தரித்து, அவர்களை கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று மீண்டும் அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான செய்திகளை கொண்டுசேர்த்துவிடும் என்பதை மனதில் கொண்டு ஊடகம் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதிமுக ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம். ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்த இயக்கத்தின் இரு கண்களாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்பதை மனதில்கொண்டு அனைவரும் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்,கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.