விஜயவாடா, ஜூன் 12: மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க பிஜேபி முன்வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பிஜேபி எம்,பி நரசிம்மராவ் சந்தித்து பேசினார்.
17-வது புதிய மக்களவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. இடைக்கால சபாநாயகராக பிஜேபியை சேர்ந்த வீரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு 19-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு விட்டு கொடுப்பது வழக்கம் என்பதால் ஆந்திராவில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு இந்த பதவியை வழங்க பிஜேபி முன்வந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பிஜேபி தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோரின் தூதராக பிஜேபி செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் நேற்று விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என்றாலும் துணை சபாநாயகர் பதவி தொடர்பாக பேசப்பட்டது என பிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே துணை சபாநாயகர் பதவியை ஏற்பது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் இது பற்றி முடிவெடுக்க அவகாசம் கேட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
ஆந்திராவில் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் பெருமளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வாக்களித்து இருப்பதால், துணை சபாநாயகர் பதவியையேற்றால் அதனால் விளைவுகள் ஏற்படக்கூடும் என கருதுவதாக தெரிகிறது.