சமூக வலைதளங்களில் கட்டுப்பாடு விதித்திடுக

தமிழ்நாடு

சிதம்பரம் ஜூன் 12: மத்திய அரசு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு களை விதிக்கவேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடலூர் மாவட்டம் நெய்வேலி குறவர் இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ராதிகாவை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்து அவரது உறவுக்கார வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மன வேதனையை தருகிறது. இதுபோன்று தவறாக சித்தரிக்கும் சமூகவலை தளங்களில் ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பகிர வேண்டும்.இதில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு பல்வேறு சமூக சிக்கல்கள் எழுகிறது என்பதால் மத்திய அரசு சமூக வலை தளங்களை பயன்படுத்துவதற்கு அரபு நாடுகளில் உள்ளதுபோல் கட்டுப் பாடுகளை கொண்டு வர வேண்டும். ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொள்வார்கள் ஆந்திர மாநிலத்தில் தலித் பெண்மணியை உள்துறை அமைச்சராக நியமித்து இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் விரைவில் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். தொகுதி பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவேன்.

அதுபோல் இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வை போன்று ஒரு தேர்வை எழுதி மாணவர்களை அடுத்தாண்டு 2020ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கலாம் என மத்திய அரசின் கல்விக் கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் இவ்வாறு அவர் கூறினார்  அப்போது மாவட்ட செயலாளர் அறவாழி முன்னாள் திமுக எம்எல்ஏ ராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.