சென்னை , ஜூன் 12: மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி தற்காலிகமானது தான் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று கட்சியில் சில எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர்கள் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், அதிமுக மாவட்டச்செயலாளர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 210 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் 110எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

குன்னம் ராமச்சந்திரன், சிதம்பரம் பாண்டியன், கிணத்துக்கடவு எம்எல்ஏ சண்முகம், கோவை வடக்கு ஆறுக்குட்டி ஆகிய 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. தாங்கள் கலந்து கொள்ளாததற்கு உரிய காரணத்தை தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார், 10.20 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன் ஆகிய 2 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்கஇயலவில்லை என்று தகவல் தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்கள்,செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டுமே பேசினார்கள். முன்னாள¢அமைச்சர் வைத்திலிங்கம் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசியதாவது:-
தேர்தலில் வெற்றியும், தோல்வியும் இயல்பான ஒன்றுதான். அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆரும் 1980-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். அது போல ஜெயலலிதாவும் பல தோல்வியை பார்த்திருக்கிறார். இந்த தோல்வி என்பது தற்காலிகமானதுதான். இதை பார்த்து யாரும் துவண்டுவிட வேண்டாம்.

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கிறோம்.
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்பட அடுத்து வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்ற¤பெற நாம் தொடர்ந்து பாடு பட வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்து விட்டனர். நமது சாதனைகளை நாம் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இந்த கட்சியில் அடிமட்ட தொண்டர்களாக இருந்த நாங்கள் தான் இப்போது தலைவர்களாகி இருக்கிறோம். இதுபோல யார் வேண்டுமானாலும் கட்சிக்கு தலைவராக முடியும். மக்கள் இயக்கமான அதிமுகவை சரிவிலிருந்து மீட்க பாடு பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதே வழியாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக்கூடும். அந்த கருத்துக்களை பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது. அப்படி கூறினால் நமது எதிரிகளுக்கு அது சாதகமாகி விடும். அனைவரது கருத்துக்களும் பரிசீலிக்கப்படும், அவற்றுக்கு பின்னர் தீர்வு காணப்படும், எனவே யாரும் தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள். பரபரப்பான சூழலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன் குவிந்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே துவங்கிய இந்த கூட்டம் சலசலப்பு ஏதுமின்றி சுமுகமாக நடந்து முடிந்தது.