சென்னை, ஜூன் 12: சென்னை ரெட்டேரி பகுதியில் சைக்கோ வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கத்தி முனையில் ஆண்களை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுவிட்டு உறுப்பை துண்டிப்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாதவரத்தைச் சேர்ந்த அட்னம் பாஷா (வயது 40) கடந்த 26-ந் தேதி ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயண பெருமாள் என்பவரும் இதேபோல் உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரெட்டேரி பாலம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட தாகவும், பின்னர் உறுப்பை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறினார்.
இது குறித்து துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விளம்பரப்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தார்கள். இந்நிலையில் ஓட்டேரியில் தங்கியிருந்த முனுசாமி (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மானாமதுரையைச் சேர்ந்த இவர் மீன்- கறி கடைகளில் வேலை செய்பவர் என தெரியவந்தது. போலீசில் இவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் சிறு வயதில் இருந்தே தனக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், இதற்கு ஆள் கிடைக்காததால் விரக்தி யில் ரெட்டேரி பாலம் அருகே நடமாடி வந்ததாகவும், அப்போது கத்தி முனையில் மேற்கண்டவர்களை மிரட்டி தனது ஆசையை தீர்த்த பிறகு உறுப்பை அறுத்ததாக கூறியிருப்பதாக தெரிகிறது.

இவர் சைக்கோ வாலிபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபோன்ற கொடிய செயல்களில் இவர் வேறு எங்காவது ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.