பாட்னா, ஜூன் 12: வயதான பெற்றோரை கைவிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு பீகார் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் அண்மைக் காலமாக வயதான பெற்றோரை கைவிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது.

சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர். இது போன்ற நிலையை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெற்றோரை கைவிட்டால் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வயதான தாய், தந்தையை கைவிட்டால் அவர்களின் மகன் மற்றும் மகளுக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்.