அம்பத்தூர், ஜூன் 12: தூர்வாரும் பணியின்போது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்ததில் கூலித்தொழிலாளி தலையில் அடிப்பட்டு பலியான சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- ஆவடி பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி, பிள்ளையார்கோயில் தெருவைச்சேர்ந்தவர் செல்லையா (வயது46) . கூலி தொழிலாளியான இவர் தூர்வாரும் பணி செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் இரண்டு நண்பர்களுடன் தண்டூரை கிராமத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். 30 அடி கிணற்றில் தூர்வாறி பணி முடிந்து நேற்று மாலை 6மணியளவில் கிணற்றின் உள்ளே இருந்த செல்லையாவை கயிறு கட்டி நண்பர்கள் மேலே இழுத்தனர். அப்போது கயிறு அறுந்து செல்லையா கிணற்றில் விழுந்தார்.

அப்போது தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்லையாவை நண்பர்கள் மீட்டுச்சென்றுஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான செல்லையாவுக்கு சரஸ்வதி என்ற மனைவி, 17வயதில் மகனும்,15வயதில் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூலித்தொழிலாளி பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணறு தூர்வாறும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது மற்றும் கயிற்றின் உறுதி தன்மையை பரிசோதிக்காதது ஆகிய வை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,