சிவகங்கை, ஜூன் 12: சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட இருந்த 5-வது கட்ட அகழாய்வு பணி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பண்டைய தமிழர் நாகரீகம் தொடர்பான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கீழடியில் நடைபெற்றன.
முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அகழாய்வு பணிகள் நடப்பதற்காக அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது. எனினும் இதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.