சென்னை, ஜூன் 13: சென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். பள்ளம் காரணமாகவும், அந்த பகுதியில் தடுப்பு அமைத்திருந்ததாலும், சர்தார் பட்டேல் சாலையில் கவர்னர் மாளிகையில் இருந்து அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய கைலாஷ் சிக்னல் அருகே ஓ.எம்.ஆர்,-சர்தார் படேல் ஜங்ஷன் சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்ததும் போக்குவரத்து காவல்துறையினர் தலைமையில், மாநகராட்சி மற்றும் சாலைப் பணியாளர்கள் இன்று காலையில் அந்தப் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 6 அடி ஆழம், 10 அடி சுற்றளவுக்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தை சிமெண்ட் கலவைகள் கொண்டு அடைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனால், காலையில் அவ்வழியாக அலுவலகம் செல்வோரும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வேலை நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அந்தப் பள்ளத்தில் இருந்து கழிவுநீர் கசிந்துவருவதால், அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றுவரும் கழிவுநீர் வடிகால்வாய்கள் பணி காரணமாகவே இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அடையாறு அருகே தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பணியின் காரணமாக கடந்த மாதம் 27-ம் தேதி இதே பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர், சிமெண்ட் கலவை கொண்டு சரிசெய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.