சென்னை ஜூன் 13: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாபா அணுமின்நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா குடிநீர் வீணாவதை குறைக்க உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாபா அணுஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பா கூறுகையில் வீடுகளிலும், கல்லூரிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம். உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் அலுவலர் எம். சண்முகசுந்தரம் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் குடிநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர். வி.கே.ராமதேசிகன் கூறுகையில் ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். சிரஞ்சுகள், திரவ மருந்துகள், கட்டுப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் பேன்டேஜ்கள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் இதர மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி தலைமை தாங்கினார். எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் ஏ.சுந்தரம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி முடிவில் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி பாபா அணுஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.