துபாய், ஜூன் 13: நடப்பு உலகக்கோப்பை தொடரில் மழையால் கைவிடப்பட்ட ஆட்டங்களை மறுபடியும் நடத்துவதற்கான (ரிசர்வ் டே) சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் நடக்க இருந்த இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், சவுத்தாம்டனில் நடைபெறவிருந்த தென்னாப்பிரிக்கா-விண்டீஸ் அணிகள் மோதிய போட்டி 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையின் குறுக்கீட்டால் பாதியில் கைவிடப்பட்டது. இன்று நாட்டிங்காமில் நடக்கவுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இல்லை என்ற போதிலும், பெரும்பாலான ஆட்டங்கள் ரத்துசெய்யப்படும் பட்சத்தில், ரிசர்வ் டே அறிவிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால், இதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில், உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு லீக் போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ என்பது சாத்தியமில்லாத ஒன்று. தொடர் முடிய நீண்ட நாட்களாகிவிடும். தவிர, ஆடுகளத்தை தயார் படுத்துவது, வீரர்களின் பயணம், தங்குமிடம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், அம்பயர்கள், ஒளிபரப்பு, ரசிகர்கள் உள்ளிட்ட நிறைய பிரச்சனைகள் உண்டு. அதேசமயம், நாக்-அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே உண்டு எனவும், லீக் போட்டிகளில் மழை குறுக்கிடும் பட்சத்தில், குறைந்த ஓவரில் போட்டியை நடத்த முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார்.