சென்னை, ஜூன் 13: குரூப்- 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்- 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டது.

அதில், 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளையும் மறு மதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி- க்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3 ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென தேர்வாணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. டி.என்.எஸ்.சி- யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப்- 1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என எச்சரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக ஜூன் 17 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி- க்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார் .