அகமதாபாத், ஜூன் 13: வாயு புயல் குஜராத்தில் கரையை கடக்காமல் போர்பந்தர் மற்றும் கடலோர பகுதிகளை கடந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இருப்பினும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்பந்தரில் பலத்த மழை பெய்து வருகிறது.

அரபிக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறிய ‘வாயு’ புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ‘வாயு’ புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது -வானிலை ஆய்வு மையம் அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கும் எனவும், இந்தப் புயலின் திசை சற்றே மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டரை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

‘வாயு’ புயல் கரையைக் கடந்த பின்னர் சவ்ராஷ்டிரா, கட்ச் கரையோரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புயல் பாதிப்புகளை இயன்றவரை தவிர்க்க குஜராத் அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குஜராத்தின் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 3 லட்சம் மக்களை அப்பகுதிகளில் இருந்து பேரிடர் மீட்பு பணியினர் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த அதிதீவிர புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்காது. இந்த புயலின் திசை மாறியதால் குஜராத்தின் வேரவல், துவாரகா மற்றும் போர்பந்தர் ஆகியவற்றை ஒட்டியப்பகுதிகளில் கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.