சென்னை, ஜூன் 13: நெற்குன்றம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து 5 பேரை வழிமறித்து. கத்திமுனையில் வழிப்பறி செய்து தப்பியோடிய 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நெற்குன்றத்தை சேர்ந்தவர் சரவணன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் இவர், நேற்றிரவு பணிமுடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, மேட்டுக்குப்பம் சாலையில் வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் சரவணனை தாக்கி செல்போன், மணிபர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துகொண்டு தப்பியோடி உள்ளனர்.

பின்னர், அதே பகுதியில் சாலையில் நடந்து வந்த பூபதி என்பரையும் வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர், இதேபோல், அடுத்தடுத்து 3 பேரை மடக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து ஆலப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 23), நெற்குன்றத்தை சேர்ந்த தினா (வயது 19), மணிகண்டன் (வயது 30), பிச்சுமணி (வயது 23),சேத்துப்பட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தப்பியோடிய 3 பேரை தேடிவருகின்றனர். இவர்களிடம் இருந்து ஒரு பைக், 2 செல்போன்கள், 2 கத்தி, பணம், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.