சென்னை, ஜூன் 13: ஜூலை 15-ல் நிலவுக்கு பயணமாகும் சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 6 அல்லது 7-ந் தேதி நிலவில் கால்பதிக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். இதுகுறித்து இஸ்ரோ தலைவரும், மத்திய விண்வெளித் துறையின் செயலாளருமான கே. சிவன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:  சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.

இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், ஜூலை 16 அல்லது 17-இல் விண்ணுக்குச் செலுத்துவோம்.
சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும்.

விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம். ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் மற்றும் ஒருங்கிணைந்த பகுதியின் எடை 3.8 டன் எடை கொண்டதாக இருக்கும். அதன் 15-ஆவது நிமிடத்தில் அந்த ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விடுவிக்கப்பட்டு, பூமியில் இருந்து 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

அதன்பிறகு மேற்கொள்ளப்படும் 5 நகர்த்தல்கள் மூலம் பூமியில் இருந்து 170 கி.மீ. அருகிலும், 40,400 கி.மீ தொலைவிலும் 5 சுற்றுவட்டப் பாதையில் 16 நாள்கள் பயணித்து, இறுதியாக பூமியை சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, மற்றொரு நகர்த்தல் மூலம் நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப்படுகிறது.

இஸ்ரோ இதுவரை செலுத்தியிராத விண்வெளிப் பயணம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். லேண்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, செப். 6 அல்லது 7-ஆம் தேதி நிலவில் கால் பதிக்கும்.

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய பிறகு, 4 மணி நேரத்தில் அதிலிருந்து ரோவர் (பிரக்யான்) மெல்லமெல்ல நிலவின் தரை மீதிறங்கும். லேண்டரும், ரோவரும் 14 நாள்கள் நிலவில் இருந்தபடியே ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும்.  இவ்வாறு அவர் கூறினார்.