சென்னை, ஜூன் 13: வறட்சி காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வருகை குறைந்து இருப்பதால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.20 விற்ற தக்காளி ரூ.40 ஆகவும். ரூ.10 விற்பனை கொத்தமல்லி இலை கட்டு ரூ.60 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மொத்த வியாபாரிகளுக்கு நாள்தோறும் 320 லாரிகளில் காய்கறிகள் வரும். இது தவிர கர்நாடகம், ஆந்திராவில் இருந்து கணிசமான அளவிற்கு காய்கறி கொண்டு வரப்படும்.

தற்போது வறட்சி காரணமாக தமிழகத்தில் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு இருப்பதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துவிட்டது. இதேபோல் பிற மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக காய்கறி விலை 70% உயர்ந்து இருப்பதாக கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.கே.சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

உருளைகிழங்கு விலை மட்டும் கிலோ ரூ.20 ஆக நீடிக்கிறது. பிற காய்கறிகளின் விலை வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. காய்கறி வாங்கினால் இலவசமாக கொடுக்கப்படும் கொத்தமல்லி இலைக்கூட தற்போது ஒரு கட்டு ரூ.10-ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்து விட்டது.

ரூ.20 விற்ற தக்காளி ரூ.50 ஆகவும், ரூ. 60க்கு விற்ற இஞ்சி ரூ.120 ஆகவும், ரூ.9 விற்பனையான பீன்ஸ் ரூ.110 ஆகவும், ரூ.15 விற்பனையான சவ் சவ் ரூ.30 ஆகவும் விற்பனையாக உள்ளது.

திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் இருந்து போதிய அளவிற்கு காய்கறிகள் வராததே இந்த விலை உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது.