தாம்பரம், ஜூன் 14: தாம்பரம் நகராட்சி பகுதியில் 1800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் மார்க்கெட் பகுதி, முத்துரங்கன் சாலை, கேம்ப் ரோடு, பாரத மாதா தெரு, ஐ.ஏ.எப் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி சுகாதார அலுவலர் மொய்தீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், ஜனார்த்தனம், சிவக்குமார், காளிதாஸ், செந்தில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில், 1,800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.60,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.