வாஷிங்டன், ஜூன் 14: ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் இரு கப்பல்களும் பற்றி எரிகின்றன. எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் நீடிப்பதால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந் தத்தை கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து விட்டு அந் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தார்.

இதனால் அமெரிக்காவை சார்ந்த நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி விட்டன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஓமன் வளைகுடாவில் ஹர்மூஸ் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

மே 12-ந் தேதி ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கா நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்நிலையில் நேற்று நார்வே மற்றும் ஜப்பானுக்கு சொந்தமான இரு டேங்கர்கள் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்த கப்பல்கள் பற்றி எரிகின்றன.

கப்பலில் இருந்த ஊழியர்கள் அருகாமையில் செல்ல பிற கப்பல்கள் மூலம் வெளியேறி விட்டனர்.தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்காத எண்ணெய் கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.