சென்னை, ஜூன் 14: பல்லாவரம் அருகே மோட்டர் போடுவதில் எழுந்த தகராறு தொடர்பாக இளம்பெண்ணை கத்தியால் குத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் மோகன் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் (வயது 45). இவர் தலைமை செயலகத்தில் சபாநாயகரின் கார் டிரைவராக உள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் தண்ணீர் வராததால், மோகன் மோட்டர் போட சென்றுள்ளார். இது தொடர்பாக எழுந்த தகராறு முற்றி கைகலப்பானதில் ஆத்திரம் தாளாத ராமகிருஷ்ணன் வீட்டிலிருந்து கத்தி எடுத்துவந்து சுபாஷினியை தாக்கியுள்ளார்.

இதில், தாடை பகுதியில் வெட்டுக்காயம் அடைந்த சுபாஷினிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்த புகாரின்பேரில், சங்கர் நகர் போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.