திருச்சி, ஜூன் 14: தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண் டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடினார்.

திருச்சி விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை அமித்ஷா என்று கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஒரு கருத்தை கூறி உள்ளார். இன்றைக்கு தலைமையே இல்லாத ஒரு கட்சி, கூட்டணி தயவில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர் சொன்ன கருத்தை திரும்பபெற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தது தேர்தல் கமிஷன்தான் என்று கூறி இருக்கிறார். அப்படியானால், 37 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் தவறு செய்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டால், அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-பிஜேபி கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளோம். இந்த கூட்டணி தோற்றாலும் ஒருவர் மீதே அதற்கான சுமையை வைக்காமல், தோல்வி பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொள்வதுதான் சரியானது. தமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர்.

இப்போது அக்கூட்டணியில் 37 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு 50 ஆண்டுகளாக ஆண்டவர்களுக்கும் உண்டு என்றார்,.