சென்னை, ஜூன் 14: தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தி¢ன் கீழ் 70 லட்சம் பேருக்கு அனைத்து விவரங்களுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகள் ஜூலை 15க்குள் வழங்கப்பட்டுவிடும்.  மாணவ மாணவிகளின் பெயர், தந்தை பெயர், வரிசை எண், பள்ளியின் பெயர், பிறந்த தேதி, தொடர்ப்பு கொள்ள செல்போன் எண், வீட்டு முகவரி மற்றும் கியூ, ஆர்.கோடு ஆகிய விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரச உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் எந்த சான்றிதலையும் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை ஸ்மார்ட் கார்டை காட்டினாலே போதும். இந்த கார்டு மூலம் மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை ஆசிரியர்கள் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம். தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது கல்வி அமைச்சர் உடன் இருந்தார். இன்னும் 2 வாரத்தில் 35 லட்சம் பேருக்கும், ஜூலை 15க்குள் எஞ்சியுள்ள 35 லட்சம் பேருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இது தவிர தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பாரதியார் நினைவு அரசு மகளிர் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை, கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் 30 அரசு பள்ளிகளில் நபார்டு கடன் உதவி திட்டங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை ஆய்வகம் கழிவறை கட்டிடங்களையும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 21 அரசு பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இது தவிர தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை எழிலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம், கட்டுப்பாட்டு அறை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு துறையினருக்கான குடியிருப்பு கட்டிடம், புழல் சிறை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் கட்டப்பட உள்ள காவல் பொது பள்ளி கட்டிடத்திற்க அடிக்கல் நாட்டினார். காவல் துறை கையாண்ட வழக்குகள் பற்றிய 2018 ஆண்டு மலரையும் முதல்வர் வெளியிட்டார். மேலும் நில அளவை மற்றும் நில வரி இயக்குனரகத்தில் காலிப்பணியிடத்திற்கான நியமன ஆணைகளையும் வழங்கினார்.

கோவை மாவட்டம், கோவை புதூர், சென்னை சிட்லப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கட்டப்பட உள்ள புதிய காவல் நிலையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசின் செய்தி குறிப்புகளில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.